புதுச்சேரி மீனவர் வலையில் சிக்கிய 3 ஆம் மாதம் தயாரிக்கப்பட்ட ராக்கெட்?
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரன். மீனவர். வழக்கம்போல் இவர், கடலுக்கு நேற்று மீன் பிடிக்க சென்றுள்ளார்.
வலைவீசிக் காத்திருந்த சிவசங்கரன், அதிக எடையுடன் ஒருப் பொருள் சிக்கியிருப்பதை உணர்ந்திருக்கிறார். இதையடுத்து சிவசங்கரன், வலையை இழுக்க முயற்சித்தார். ஆனால், பொருளை மேலே தூக்க முடியவில்லை.
இந்த சம்பவம் குறித்து தனது ஊரிலிருக்கும் தனது நண்பர்களுக்கும் சிவசங்கரன் தகவல் அளித்துள்ளார். பின் தனது நண்பர்களின் உதவியோடு, அந்த பொருளைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்தார். வம்பாகீரப்பாளையம் கடற்கரையில் பலர் கூடி அந்த வலையை இழுத்து வெளியே இழுத்தபோதும் பலன் கிடைக்கவில்லை.
இறுதி முயற்சியாக அந்த வலை ஜெசிபி இயந்திரம் கொண்டு வெளியே கரைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போதுதான், அதில் ராக்கெட் சிக்கியிருந்தது தெரியவந்தது.
மீனவர் வலையில் ராக்கெட் சிக்கியது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், பொருளை ஆய்வுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.